வாலாஜா அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாவை அடுத்த கோவிந்தசேரிகுப்பம் கிராமம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். நாராயணகுப்பம் கிராமம் பஜனைகோவில் தெருவை சேர்ந்த தேவனின் மகள் ஷில்பா (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், ஷில்பா நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மகள் சாவில் மர்மம் இருப்பதாக தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இளம் பெண் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் ஷில்பாவின் மரணத்திற்கான காரணம் குறித்து ஆர்டிஓ விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது.