இபிஎஸ் நம்பர் ஒன் தான்.. எதுல தெரியுமா? பிரதமர் மோடி இப்படி சிந்தித்துள்ளாரா? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!
பிரதமர் மோடியின் மூளை, மக்களை பிரிப்பதில் சிந்திக்கும் ஒரு சதவீதமாவது மக்களுக்கு நல்லது செய்ய சிந்தித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காஞ்சிபுரம் படப்பையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் காற்றில் பறக்கவிடப்பட்டு, RSSன் சித்தாந்தம் நாட்டை ஆளும். இதையெல்லாம் தடுப்பது உங்கள் வாக்குதான். பிரதமர் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இருக்காது. பெண்களை மதிப்பதாக வீர வசனம் பேசுபவர், மகளிருக்கு இடஒதுக்கீடு சட்டத்தை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.
திமுகவுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பலை வீசுவதாக பிரதமர் மோடி நேற்று பேசியுள்ளார். இதைப் பார்த்து சிரிப்பதா அல்லது அவரின் பகல் கனவைப் பார்த்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும் என பிரதமரை யாரோ ஏமாற்றியுள்ளனர். பிரதமர் மோடியின் மூளை, மக்களை பிரிப்பதில் சிந்திக்கும் ஒரு சதவீதமாவது மக்களுக்கு நல்லது செய்ய சிந்தித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. மத்திய அரசிடம் நான் அவார்டு வாங்கினேன் , நீங்கள் வாங்கினீர்களா என பழனிச்சாமி கேட்கிறார். நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் என்ற திரைப்பட வசனத்திற்கேற்ப பழனிசாமி அவார்டு வாங்கினார். திமுக அரசு மக்களிடமிருந்து அவார்டு பெற்றுள்ளது. திமுகவுக்கு அடுத்த அவார்டு ஜூன் 4 ஆம் தேதி காத்திருக்கிறது.
எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை இந்தியாவின் பிற மாநிலங்கள் தி.மு.க, திட்டங்களை பின்பற்றி வருகின்றன. தனி மனிதனின் பிரச்னைகள், தேவைகளை தீர்க்க பார்த்து பார்த்து நவடிக்கை எடுத்து வருகிறோம். இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திறன் பயிற்சி தேவை என தொழில் முனைவோர்கள் கூறினர்.
எடப்பாடி சொல்கிறார் அவரது ஆட்சியில் தான் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்தது என்று பேசுகிறார். பழனிசாமி அவர்களே நீங்கள் எதில் நம்பர் ஒன் என்று தெரியுமா?... பதவி சுகத்திற்காக மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தீர்களே அதில் தான் நீங்கள் நம்பர் ஒன். எப்படியெல்லாம் மோடிக்கு, மத்திய அமைச்சர்களுக்கு, பாஜகவுக்கு காவடி பாடினீர்கள். மோடி தான் எங்கள் டாடி என்று சொன்னீர்களே” என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..