நடைபயிற்சி சென்றபோது மின்னல் தாக்கியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த கூரம் கிராமம் அரசமரத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் கார்த்திக் பாலா (25). இவர், பாலுச்செட்டிசத்திரம் பஜாரில் இருசக்கர வாகனங்களுக்கான நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியா என்பவருடன் மார்ச் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், நேற்று காலை புதுமாப்பிள்ளை கார்த்திக் பாலா, அங்குள்ள ஏரிக்கரையில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை கொட்டியது. எதிர்பாராத விதமாக கார்த்திக் பாலாவை மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி செய்தி அறிந்ததும் புதுமனைவி கணவனின் உடலை கட்டிப்பிடித்து கதறினார்.

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் பாலா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். நடைபயிற்சி சென்ற போது மின்னல் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.