மோடி-ஜின்பிங் மாமல்லபுரம் வருகை... விடுமுறையைக் கழிக்க ஈசிஆர் பிளான் போடாதீங்க மக்களே..!
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தின் சிற்பங்கள் குறித்தும் சிறப்புகள் குறித்தும் சீன அதிபர் ஜின்பிங்குக்கு விளக்கப்பட உள்ளது. இரு தலைவர்களும் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்வையிட உள்ளனர்.
மாமல்லபுரத்துக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வர உள்ளதால் மாமல்லபுரம், கிழக்குக் கடற்கரை சாலை போன்ற பகுதிகள் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளார். அக். 12 முதல் 14 தேதிகளில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மாமல்லபுரத்தில் நடத்துகிறார்கள். இந்தச் சந்திப்பின்போது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தின் சிற்பங்கள் குறித்தும் சிறப்புகள் குறித்தும் சீன அதிபர் ஜின்பிங்குக்கு விளக்கப்பட உள்ளது.
மேலும் இரு தலைவர்களும் கோவளத்தில் உள்ள தாஜ் நட்சத்திர விடுதியில் தங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை இரு தலைவர்களும் பார்வையிட உள்ளனர். மாமல்லபுரத்தில் பாரம்பரிய, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன. தமிழக தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் மூன்று முறை மாமல்லபுரம் வந்து ஆய்வு நடத்திவிட்டார்கள். இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாமல்லபுரத்தில் ஆய்வு செய்ய உள்ளார்.
இந்நிலையில், மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை சாலை ஆகியவற்றை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவர்கள், துப்பாக்கிகளை அருகே உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்காக தனி வாகனங்களில் மாமல்லபுரம் வருவோர் தீவிர விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கிடையே அக் 10 - 14 வரை கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக பழைய மகாபலிபுரம் சாலையைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.