கிரிக்கெட் போட்டியின் போது பந்து தாக்கியதில் 17 வயது இளைஞர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காஞ்சி மத்திய மாவட்ட மருத்துவர் அணி மற்றும் கழகத்தின் சார்பில், இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தி, பிறந்த நாள் அன்று பரிசு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த போட்டி, மதுராந்தகம் அருகே சூனாம்பேடு அடுத்த அகரம் கிராமத்தில், கடந்த டிசம்பர் 29-ம் தேதி தொடங்கி, ஒன்றறை மாத காலமாக நடந்து வருகிறது. 

இதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், நேற்று 2-வது சுற்று விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் சூனாம்பேடு பகுதியை சேர்ந்த அனியும் அச்சிறுப்பாக்கம் அணிகளும் விளையாடிக்கொண்டிருந்தன. அப்பொழுது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். எதிரணியைச் சேர்ந்த கமலேஷ் என்ற 11-ம் வகுப்பு மாணவன் பந்து வீசியுள்ளார். பந்து சுனில் மார்பின் மீது வேகமாக பட்டுள்ளது. சுனில் உடனடியாக மார்பை பிடித்துக் கொண்டு கீழே மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக மற்ற விளையாட்டு வீரர்கள் அவரை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.