செங்கல்பட்டில் செம காட்டு காட்டும் கொரோனா... உயிரிழப்பு புதிய உச்சத்தால் பொதுமக்கள் பீதி..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 2,092 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,369-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,05,734 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நேற்று சிகிச்சை பலனின்றி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 44 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,395-ஆக உயர்ந்தது. இதில், 15,240 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 44 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும், பலி எண்ணிக்கை, தொற்று பரவலும் குறையவில்லை. இதனால், பொதுமக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தின் முக்கிய இடங்களான செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட பல பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த 135 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.