செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்துள்ளது. இதனையடுத்து, பாதிப்பில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு 2வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் அடக்கி வசித்து வந்த கொரோனா கடந்த சில நாட்களாக கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே  போகிறது. அரசு தரப்பில் பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிப்பு கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 560 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை செங்கல்பட்டில் 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, பாதிப்பில் சென்னைக்கு அடுத்த படியாக 2வது இடத்தில் இருந்த திருவள்ளூர் மாவட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம் பின்னுக்கு தள்ளியுள்ளது.