மாமல்லபுரம் அருகே கோவிலுக்கு சென்றபோது வேன்-கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தியாகராயநகரில் நடைபெறும் உறவினர் இல்ல சுப நிகழ்ச்சியில் பங்கேற்க பாண்டிச்சேரியில் இருந்து 6 பேர் நேற்று அதிகாலை ஒரு காரில் புறப்பட்டனர். அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது அதிவேகத்தில் வந்த பார்சல் வேனும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில், காரில் பயணம் செய்த செந்தில் (40), முருகன் (53), ஜெயராமன் (70) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில், மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.