அனந்தசரஸ் திருக்குளம் சேர்கிறார் அத்திவரதர் !! பிரியாவிடை கொடுப்போம் .. இனி 2059 இல் தான் வருவார் ..
கடந்த 48 நாட்களாக மக்களுக்கு காட்சி தந்த காஞ்சிபுரம் அத்திவரதர் , இன்று தனது இருப்பிடமான அனந்தசரஸ் குளத்திற்கு செல்ல இருக்கிறார் ..
1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன .
பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே சென்றது . 4 முதல் 5 லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர் . குடியரசு தலைவர் , பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்கள் , திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலர் வந்து அத்திவரதரை தரிசித்தனர் . திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது .
48 நாட்கள் மட்டுமே இவர் காட்சி தருவதால் மூலவரான வரதராஜ பெருமாளுக்கு செய்யப்படும் நான்கு கால பூஜைகள் அத்திவரதருக்கு செய்யப்பட வில்லை . நிவேதனங்கள் படைக்கப்பட்டு தீபாராதனைகள் மட்டுமே காட்டப்பட்டது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி பேர் காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .
இந்த நிலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் இன்றோடு நிறைவு பெறுகிறது . பொது தரிசனம் அனைத்தும் நேற்றே முடிக்கப்பட்டு விட்டது . ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் இன்று தன் இருப்பிடமான அனந்தசரஸ் திருக்குளம் சேர இருக்கிறார் .
இந்த நிகழ்வின் போது பட்டாச்சாரியார்கள் , திருக்கோவில் ஊழியர்கள் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது .
இன்று அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் அடுத்து 40 ஆண்டுகள் கழித்து 2059 இல் தான் வெளிவருவார் . அந்த நேரத்தில் இப்போது தரிசனம் செய்த நம்மில் எத்தனை பேர் மீண்டும் தரிசிக்கும் புண்ணியம் பெற்றிருப்பார்கள் என யாருக்கும் தெரியாது . எனவே அத்திவரதருக்கு இன்று பிரியா விடை கொடுப்போம் .. தேசத்தின் நலனுக்காகவும் , உலக அமைதிக்காகவும் , பொதுமக்களின் சந்தோசத்திற்காகவும் வேண்டி கொள்வோம் ..