கலெக்டரை காப்பாற்றிய அத்திவரதர்... ஆனால் இன்னும் ஒரு வாரம் தானாம்..!
காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவதூறாக பேசிய விவகாரம் டிஜிபி முதல் சாதாரண காவலர் வரை பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா அவதூறாக பேசிய விவகாரம் டிஜிபி முதல் சாதாரண காவலர் வரை பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இன்ஸ்பெக்டரை கண்டிக்க ஆட்சியருக்கு முதலில் உரிமை இல்லை. அவர் தவறு செய்தால் உயர் அதிகாரியிடம் புகார் அளிப்பதுடன் நின்று கொள்ள மட்டுமே கலெக்டருக்கு அதிகாரம் இருக்கிறது. ஏன் முதலமைச்சராக இருந்தாலும் கூட தவறு செய்த போலீஸ்கார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு உரிய அதிகாரிக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியாது. நேரடியாக எந்த போலீஸ்கார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது.
உண்மை இப்படி இருக்க இன்ஸ்பெக்டர் ஏதோ மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாக கூறி ஆட்சியர் பொன்னையா குதித்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது. மேலும் அதனை வீடியோ எடுத்து ஊடகங்கள் வெளியிட்டது போலீஸ் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்தது. காக்கி யூனிபார்மில் இருக்கும் ஒரு அதிகாரியை கலெக்டர் ஒருமையில் பேசியதை ஐஏஎஸ் அதிகாரிகளே கூட ரசிக்கவில்லை.
உடனடியாக கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தங்கள் ஆதங்கத்தை முதலமைச்சர் அலுவலகத்திடம் தட்டிவிட்டுள்ளனர். முதலமைச்சரும் கூட தன்னுடைய துறையின் கீழ் வரும் ஒரு அதிகாரியை கலெக்டர் ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது என்று தான் கூறியுள்ளார். சஸ்பெண்ட் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் கலெக்டர் பதவியையாவது பறிக்க வேண்டும் என்று முதலமைச்சரை நச்சரித்துள்ளனர்.
ஆனால் அத்திவரதர் வைபவம் சென்று கொண்டிருக்கும் நிலையில் கலெக்டரை மாற்றினால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் என்று முதலமைச்சர் கைகளை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கட்டிப்போட்டுள்ளனர். மேலும் டிரான்ஸ்பர் என்பதோடு நிறுத்திக் கொள்வது தான் சரியாக இருக்கும் என்றும் அவர்கள் முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனை அடுத்தே இந்த விவகாரத்தில் கலெக்டர் பொன்னையா மீது உடனடியாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்.
ஆனால் அத்திவரதர் வைபவம் முடிந்து அவர் குளத்திற்குள் சென்ற மறுநாள் பொன்னையா காஞ்சிபுரம் கலெக்டராக இருக்கமாட்டார் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் பேச ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் கலெக்டர் எவ்வித பாஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் தன்னுடைய குடும்பத்துடன் அத்திவரதரை தரிசிக்க செல்லும் வீடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது.