அத்திவரதர்....... இந்த பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல.!!! என்ற ரேஞ்சுக்கு கடந்த 48 நாட்களும் ஒரு கலக்கு கலக்கிவிட்டு மீண்டும் சயன கோலத்திற்கு சென்றுவிட்டார். 

நமது சூப்பர் ஹீரோ கடவுள் அத்திவரதரை 48 நாட்களில் ஒரு கோடியே 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசித்து மிகப்பெரிய உலக சாதனை படைத்து விட்டார்கள் என்றே சொல்லலாம். திரும்பிய பக்கமெல்லாம் அத்திவரதர் பாஸ் இருக்கா ”vip entry” கிடைக்குமா என கேட்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அத்திவரதர் மோகம் அனைவரையும் ஆட்டிப் படைத்தது. 

பெரும் கூட்டத்தை பற்றி கவலைப்படாமல், ஜனாதிபதி முதல் உள்ளூர் ஜெகன்நாதன் வரை அத்தி வரதரை தரிசனம் செய்தனர். ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர பெரிய விபத்துக்கள் இன்றி அரசு நிர்வாகம் திறம்பட வேலைகளை செய்து இருந்தது. தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், டெல்லி என பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அத்தி வரதரை காண காஞ்சிபுரத்திற்கு படையெடுத்தது, அத்திவரதரின் மகிமைக்கு ஒரு சாட்சியாக பார்க்கப்பட்டது.

குறிப்பாக எந்த மிகப்பெரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாத காஞ்சிபுரம் நகரில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்றில் இருந்து நான்கு லட்சம் பேர் வரை உள்ளே நுழைந்து தரிசனம் செய்து வெளியே சென்றனர். ஆனால் பல நூறு ஆண்டுகளாக அதிக கட்டுப்பாடுகளோடு செயல்பட்டுவரும் திருப்பதி தேவஸ்தானத்தில் சராசரியாக 75 ஆயிரம் பேர் மட்டுமே ஒரு நாளைக்கு வந்து செல்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். 

அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தை அத்திவரதர் ஆட்டிப் படைத்து விட்டார் என்று புளங்காகிதம் அடைகின்றனர் தமிழ்நாட்டு அத்தி வரதர் பக்தர்கள். இதே ரேஞ்சில் சென்றிருந்தால் திருப்பதிக்கு செல்லும் கூட்டமே மொத்தமாக குறைந்து போயிருக்கும் என்றும் பெருமைப்பட்டுக் கொண்டனர். இதுமட்டுமின்றி திருப்பதி தேவஸ்தான உண்டியல் கலெக்‌ஷனே அத்திவரதரால் ஆடிப்போய் உள்ளது என்ற தகவல்களும் றெக்கை கட்டி பறக்க தவறவில்லை. அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும், கடந்த 48 நாட்களாக அத்தி வரதர் புராணம் தான். உண்மையில் அத்திவரதர் சிலையின் அந்த முக அழகு வசீகரம் அனைத்து மக்களையும் ஒரு சேர கவர்ந்துள்ளது என்றால் அது மிகையல்ல.