அத்திவரதர் பாதுகாப்பு பணியின் போது காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு..!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். நேற்று அத்திவரதர் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து, 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அத்திவரதர் விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் சுமார் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கோவையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் வெள்ளிங்கிரி (50) பாதுகாப்பு பணிக்காக காஞ்சிபுரம் வந்து இருந்தார். அவர் பணி முடிந்து வாலாஜாபாத்தில் தங்கி இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிங்கிரி பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி வெள்ளிங்கிரியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.