காஞ்சிபுரம் அருகே இருக்கும் வேங்கைவாசலைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு ஹிருத்திக் என்கிற ஆறு மாத ஆண்குழந்தை இருந்துள்ளது. சக்தி முருகன் தனது தாய், மனைவி மற்றும் மகனுடன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் குழந்தை ஹிருத்திக்குடன் அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலமாக வந்துள்ளனர். 

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது குழந்தை மயங்கிய நிலையில் பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் தெரிவித்தனர். உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்தனர். 

அப்போது குழந்தை ஹிருத்திக் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. அதுகுறித்து கேட்ட குழந்தையின் பெற்றோர் கதறி துடித்தனர். குழந்தை விமானத்தில் ஏறும் போது நலமாக இருந்ததாக தாய் தீபா தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விமானத்தில் வந்த பச்சிளம் குழந்தை மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.