காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இருக்கிறது பெருநகர் நியூ காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி. இவருக்கு திருமணமாகி புனிதன் (வயது 4). மகள் பொன்மதி (2) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிறுவன் புனிதன் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார். தினமும் பள்ளி வாகனத்தில் புனிதன் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்றும் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவன் மாலை வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.

வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர்(28) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சிறுவனை வீட்டில் இறக்கிவிட்டு வாகனத்தை மீண்டும் ஓட்டுநர் இயக்கியிருக்கிறார். அப்போது புனிதனின் தங்கை பொன்மதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், வேன் அருகே வந்திருக்கிறார். வேன் டயர் அருகே சிறுமி நின்றதை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதாக தெரிகிறது. இதனால் டயரின் அடியில் சிக்கிய குழந்தை பொன்மதி மீது வாகனம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த குழந்தை கதறி துடித்தது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. சடலமாக கிடந்த குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் வேன் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: அடுத்தடுத்து தூக்கில் பிணமாக தொங்கிய இளம் தம்பதி..! பரிதவிக்கும் ஒன்றரை வயது குழந்தை..!