1979 ம் ஆண்டிற்கு பிறகு கடந்த ஜூன் இறுதியில் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் . ஜூலை 1 ம் தேதியில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க தொடங்கினார் . தினமும் வித விதமான மலர் அலங்காரங்களோடு வண்ண வண்ண பட்டுகளில் அருள்பாலித்தார் . ஜூலை 31 வரை சயனகோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன  .

பின்னர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் கூடிக்கொண்டே  சென்றது  . 4  முதல்  5  லட்சம் பக்தர்கள் வரையிலும் ஒரு நாளைக்கு தரிசனம் செய்தனர் . 

குடியரசு தலைவர் , பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் , அரசு உயர் அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்கள் , திரையுலகை சார்ந்த பிரபலங்கள் என பலர் வந்து அத்திவரதரை தரிசித்தனர் . திருப்பதியை காட்டிலும் அத்திவரதரை காண வந்த கூட்டம் அதிகம் இருந்தது . இந்த 48 நாட்களிலும் கிட்டத்தட்ட 1 கோடி காஞ்சிபுரம் வந்து அத்திவரதரை தரிசித்து உள்ளனர் .

இந்த நிலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றது  . ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர்  தன் இருப்பிடமான அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்பட்டு  விட்டார்  .

இந்த 48 நாட்களிலும் காஞ்சிபுரம் நகரில் அதிகப்படியான குப்பைகள் சேர்ந்துள்ளது .லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த காஞ்சியில் சேர்ந்த  குப்பைகளையும், கழிவுகளையும் சுத்தம் செய்ய காஞ்சி நகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி திருவள்ளூர், கடலூர், திருவாரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து  2,000  தொழிலாளர்கள் என பெரும் படையே களமிறங்கியது.

சாக்கடையை சுத்தம் செய்வது, குப்பை அள்ளுவது என குறுகிய நேரத்தில் பெரிய செயல்களை விரைந்து செய்து முடித்தனர் . இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டினார்.

48 நாட்களில் 1200 டன் குப்பையை இந்த பணியாளர்கள் அள்ளியிருக்கிறார்கள். அள்ளப்பட்ட  குப்பை சின்ன காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தம்பேட்டை திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் கொட்டப்பட்டுள்ளது. அங்கு மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து அதிலிருந்து உரம் தயாரித்து மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. பயோ கேஸ் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.