பொது இடத்தில் மாவட்ட ஆட்சியர் இன்ஸ்பெக்டரை இப்படி வாடா போடா, வாய்யா போய்யா என்று பேச எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? ஒருமையில் திட்டியது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தகவல்கள் கேட்டுள்ளார்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு அத்திவரதரை தரிசிக்கும் விஐபி வரிசையில் பொதுமக்கள் சிலரை அனுப்பியதாக இன்ஸ்பெக்டர் ஒருவரை, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா கடுமையாக சாடும் வீடியோ வெளியானது. இதற்குப் பொதுவெளியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஓர் இன்ஸ்பெக்டரை பொது இடத்தில் வைத்து அசிங்க அசிங்கமாக திட்ட ஆட்சியருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால், தான் எந்த ஒரு நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்த ஆட்சியர் பொன்னையா, காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருச்சி கொடுங்குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகையா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அத்திவரதர் கோயில் தரிசனம் குறித்தும், இன்ஸ்பெக்டரை மாவட்ட ஆட்சியர் ஒருமையில் பேசியது குறித்தும் காஞ்சிபுரம் மாவட்டப் பொது தகவல் அதிகாரியிடம் சில தகவல்களைக் கேட்டு நேற்று (ஆகஸ்ட் 13) மனு அளித்துள்ளார்.

அதில், “அத்திவரதர் தரிசனத்தில் பொது தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் எனப் பிரிக்கப்படுவது எந்த சட்டத்தின் கீழ்? விவிஐபி மற்றும் விஐபிக்கள் தரிசன பிரிவில் அனுமதிக்கத் தக்கவர்கள் யார் யார்? அவர்கள் விவிஐபி, விஐபி என்பதற்கான தகுதிகள் என்னென்ன? கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை விவிஐபி, விஐபி பிரிவுகளில் எத்தனை நபர்கள் தரிசனம் செய்துள்ளார்கள்? அவர்களது பெயர் மற்றும் விவரங்களை அளிக்கவும் கேட்டுள்ளார்.

வரிச்சியூர் செல்வத்துக்கு எதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விவிஐபி பாஸ் வழங்கினார்?  என்ற தகவலை அளிக்கவும் என்று கேட்டுள்ள அவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள், கோயில் பாதுகாப்புப் பணியில் உள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறை ஊழியர்களை பொது இடத்தில் வைத்து வாடா போடா, வாய்யா போய்யா என்று ஒருமையில் பேசுவதற்கு எந்த சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது? எனக் கேட்டுள்ளார். ஆட்சியர் தனக்குக் கீழ் நிலையில் பணிபுரியும் வருவாய் ஊழியர்களிடம் பொது இடத்தில் வைத்து இப்படி வாடா போடா, வாய்யா போய்யா என்று ஒருமையில் பேச முடியுமா? என்ற தகவலை அளிக்கவும் எனவும் கேட்டுள்ளார்.