திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிலோ கஞ்சா பதுக்கியதாக கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,00,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கஞ்சா பதுக்கல்

கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.1,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சாலையில் உள்ள சஹானா மில் அருகே முட்புதரில் விற்பனைக்காக கடந்த 2023ம் ஆண்டு 45 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆத்தூர் தாலுகா நெல்லூர் பகுதியைச் சேர்ந்த அக்னிஹாசன்(53), பாண்டிதுரை (34), மற்றும் புலியராஜகாபட்டி பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (54), ஆகிய 3 நபர்களை திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு

இந்நிலையில் இவ்வழக்கு மதுரை முதலாம் கூடுதல் சிறப்பு போதை பொருட்கள் மனமயக்கும் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகன் நீதிமன்ற தலைமை காவலர் வீரையா மற்றும் அரசு வழக்கறிஞர் விஜய பாண்டியன் ஆகியோர்களின் சீரிய முயற்சியால் நேற்று மதுரை போதைப் பொருட்கள் மனமயக்கம் பொருட்கள் மற்றும் தடுப்பு வழக்குகள் நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்கண்ட குற்றவாளிகள் 3 நபர்களுக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,00,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.