கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து! 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு சுற்றுலா சென்ற வேன் கரூர் அருகே விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். ஆம்னி பேருந்து மோதியதில் வேன் நொறுங்கியதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து ஏற்காடு சுற்றுலாவுக்காக வேனில் 20 பேர் வந்துக்கொண்டிருந்தனர். வேன் கரூர் வெண்ணெய்மலை அருகே வந்துக்கொண்டிருந்தது. அப்போது பெங்களூரில் இருந்து நாகர்கோவில் சென்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்து முன்னாள் சென்ற டிராக்டர் மீது மோதி சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ஆம்னி பேருந்தும், வேனும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் குழந்தை, வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் சிலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிாந்த 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.