பருப்பு வடைக்குள் இருந்த சுண்டெலி; வாடிக்கையாளர் அதிர்ச்சி
பொதுவாக வடை அல்லது உணவு பொருட்களில் ஈ, பல்லி, புழு போன்ற பிராணிகள் இருப்பதை பார்த்திருக்கலாம் ஆனால் பருப்பு வடைக்குள் முழு சுண்டெலி கிடந்த சம்பவம் ஒன்று திண்டுக்கல்லில் நிகழ்ந்து வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் உள்ள கடையில் வாங்கப்பட்ட உளுந்து வடையி்ல் பல்லி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்னாளபட்டி அருகே பூஞ்சோலையில் பிரபல டீ கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வடை, போண்டா, பனியாரம் உள்ளிட்ட பலகாரங்கள் சுவை மிகுந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். சின்னாளபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த கடையில் பலகாரம் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் சிறுமி ஒருவர் சுமார் 10 வடைகளை தனது வீட்டிற்கு வாங்கிச் சென்றுள்ளார்.
அண்ணாமலை வாட்ச் தேவையில்லாத ஆணி..! கே.எஸ்.அழகிரி
வீட்டிற்கு சென்றதும் ஒரு பருப்பு வடையை எடுத்து சாப்பிடத் தொடங்கியுள்ளார். அப்போது வடைக்குள் சுண்டெலி ஒன்று கருகிய நிலையில் இறந்து கடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கடை உரிமையாளரிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். சம்பவத்தை ஒப்புக் கொண்ட கடை உரிமையாளர் இது குறித்து யாரிடமும் தெரியப்படுத்த வேண்டாம். நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று மன்றாடியுள்ளார்.
இருப்பினும் வடைக்குள் சுண்டெலி இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. அதன் அடிப்படையில் கடையை ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு பொருட்கள் திறந்த வெளியில் தயாரிக்கப்படுவதையும், சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்து கடைக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற சம்பவம் தொடரும் பட்சத்தில் கடைக்கு சீல் வைக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.