பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட பின் சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டது. பெற்றோர் கேள்வி எழுப்பியதற்கு மருத்துவர் அலட்சியமாக பதிலளித்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பிரகாஷ் -தமிழ் தம்பதியின் மகன் தனுஷன். இவர் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கீழே விழுந்து காயம் அடைந்ததால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் வைரல்

இதன் காரணமாக சிறுவன் தனுஷன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று ஊசி போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்டுக் கொண்ட ஓரிரு தினங்களுக்குள் சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டு வீங்கிய நிலையில் அது குறித்து மருத்துவரிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது மருத்துவர் அலட்சியமாக பதில் அளிக்கக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல் நிலையத்தில் புகாராளிக்கவா

அதில் ஊசி போட்டுக் கொண்டதெல்லாம் எனக்கு தெரியாது, என்னைய கேள்வி கேட்டால் உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்படும். அரசியல் செல்வாக்கில் உள்ள மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் மட்டும் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு செல்லும் ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

மருத்துவர் மிரட்டல்

நீ எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளிக்கலாம். என்னை எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர் மிரட்டல் பாணியில் பேசுகிறார்.நோயாளிகளிடம் அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளும் மருத்துவர் இளம்தமிழ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.