கோவையில் ஆக்ஸிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு... தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை...!
அதேபோல் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. கொரோனா 2வது அலையில் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தலைநகர் சென்னை முதலிடத்தில் இருக்கிறது, அதற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவை மாவட்டதில் 3 ஆயிரத்து 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கோவையில் மட்டும் 26 ஆயித்து 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. இதில் அரசு சார்பில் உள்ள 1,112 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 316 படுக்கைகள் என அனைத்தும் நிரம்பிவிட்டன. அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் காலியாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. கோவையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்களால் மயானங்கள் நிரம்பி வருகின்றன.
தற்போது கோவையில் சாதாரண படுக்கைகளைக் கொண்ட சிகிச்சை மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே ஆக்ஸிஜன் படுக்கைகளை அமைத்துத் தர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.