ஜிஎஸ்டி வருவாய்: கோவை சாதனை!
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக 2022-23ஆம் ஆண்டில் ரூ.3,003 கோடி வருவாயை கோவை பதிவு செய்துள்ளது
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு இன்றளவும் எதிர்ப்புகள் உள்ள நிலையில், கோயம்புத்தூர் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையரகம், 2022-23ஆம் ஆண்டில் ரூ.3,003 கோடி வருவாயைப் பதிவுசெய்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதிகபட்சமாக இந்த வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை ஜிஎஸ்டி ஆணையரகத்துக்கான ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் ஏஆர்எஸ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஜிஎஸ்டியை வெற்றிகரமாக செயல்படுத்தியதைக் கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி நாள் 2023 கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கோவை ஜிஎஸ்டி ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதன்மை ஆணையர் ஏஆர்எஸ் குமார், கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய வரி அடிப்படை கடந்த ஆறு ஆண்டுகளில் 53,800 லிருந்து 77,484 ஆக அதிகரித்துள்ளது என்றார்.
2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது மொத்த வரி வசூல் ரூ.1,106 கோடியாக இருந்தது. அது 2022-23ஆம் ஆண்டில் ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையில் இதுதான் அதிகபட்சம் எனவும் ஏஆர்எஸ் குமார் பெருமிதம் தெரிவித்தார்.
வளர்ச்சியில் சென்னைக்கே டஃப் கொடுக்கும் கோவை; பொறாமை கொள்ளும் பிறமாவட்ட மக்கள்
ஜிஎஸ்டி அதன் நோக்கங்களை எட்டியுள்ளது; இது மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைத்த வெற்றிகரமான சூழ்நிலை என்ற அவர், “எம்எஸ்எம்இ துறையின் 88% செலவுக் குறைப்புக்கு ஜிஎஸ்டி காரணம் என்று சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நன்கு அறியப்பட்ட மையமாக கோவை உள்ளது. அவை ஜிஎஸ்டியை வரவேற்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை ஜிஎஸ்டி ஆணையரகத்தின் சாதனைகளை விளக்கிய ஏஆர்எஸ் குமார், “2022ஆம் ஆண்டில் சட்டத்தை அமல்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கைகள் வரி வசூல் அதிகரிப்புக்கு உதவியது. ரூ.112 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையின் போது ரூ.47 கோடி மீட்கப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வரி ஏய்ப்பை கண்டறிவது 83 சதவீதமாகவும், அதன்படி மீட்கப்படும் தொகை 134 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.” என்றார்.
எங்களது தொடர் முயற்சியால், 2022 ஆம் ஆண்டில் 87% ஆக இருந்த ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் தாக்கல், கடந்த நிதியாண்டின் முடிவில் இது 97% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார். “ஜிஎஸ்டி ரீபண்ட்களை உடனடியாக கொடுத்து வருகிறோம். இதுவரை, 657 கோடி ரூபாயை திருப்பி கொடுத்துள்ளோம், கடந்த ஆண்டு, 150 கோடி ரூபாயை திருப்பி கொடுத்துள்ளோம். ரிட்டர்ன்ஸ் தாக்கல் சரியாக இருக்கும்பட்சத்தில், ஒரு மாதத்திற்குள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உள் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். ஜிஎஸ்டி வரி செலுத்துவோருடன் நாங்கள் நல்ல முறையில் தொடர்பில் இருக்கிறோம்.” எனவும் ஏஆர்எஸ் குமார் தெரிவித்தார்.
போலி ஐடிசி பதிவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கிய முதன்மை ஆணையர் ஏஆர்எஸ் குமார், “கோவை மண்டலத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 324 வரி செலுத்துவோர் போலியான உள்ளீட்டு வரிக் கடன் தாக்கல் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், 212 நிறுவனங்களை நாங்கள் சரிபார்த்துள்ளோம், அவற்றில் 186 இல்லாத நிறுவனங்கள், 26 நிறுவனங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இல்லாத நிறுவனங்கள் மூலம், அவர்கள் பெற்ற போலி ஐடிசி சுமார் ரூ.127 கோடியாக உள்ளது. இந்த 186 நிறுவனங்களில், 84 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, 17 நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 63 நிறுவனங்களின் உள்ளீட்டு வரிக் கடன் தாக்கல் சுமார் 13.72 கோடி ரூபாய் அவர்களின் பதிவுகளில் உள்ளது. அந்த தொகை அவர்களின் கைகளுக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. உண்மையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் வரை அவர்கள் உள்ளீட்டு வரிக் கடனை அவர்கள் பெற முடியாது.” என்றார்.
கோவை ஜிஎஸ்டி ஆணையரகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி நாள் 2023 கொண்டாட்டத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான சதாசிவம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.