கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து,  மேலும் பணியில் இருந்த 20 மருத்துவர்களுக்கு கொரோனா சோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடு உயர்ந்து வருகிறது. இதுவரை 1075ஆக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 199 பேருக்கும், கோவையில் 119 பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும், திருப்பூரில் 60 பேருக்கும், திண்டுக்கல்லில் 56 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  இந்த வைரஸ் தொற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

 இந்நிலையில்,  கோவை, திருப்பூர், ஊட்டி ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு மருத்துவர்களுக்கு  காய்ச்சல் இருந்ததை அடுத்து பரிசோதனை செய்ததில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் பணியில் இருந்த 20 மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் மேலும் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக முழுவதும் இதுவரை 22.000 மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.