சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இதை அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் காதலை ஏற்க மறுத்துள்ளனர். மகளின் காதல் விஷயத்தை அறிந்ததும் அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்திருக்கின்றனர். வேறொரு நபருடன் ரேகாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தனது காதலனிடம் தெரிவித்த அப்பெண், எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்படி திட்டம் தீட்டி, காதலிக்கும் போது இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்தனர். ரேகாவின் காதலன், தனது எண்ணில் இருந்து புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார். அதை பார்த்து அதிர்ந்து போன மணமகன், பெற்றோரிடம் காட்டியிருக்கிறார்.

அவர்கள் ரேகாவின் குடும்பத்தினரிடம் விஷயத்தை கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளனர். பின்னர் மணமகனுக்கு வேறொரு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து யார் புகைப்படத்தை அனுப்பியிருப்பார்கள் என்று கண்டுபிடிப்பதற்காக பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி புகைப்படம் வந்த எண்ணை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் ரேகாவின் காதலன் என்று தெரிய வந்தது. இருவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக திட்டம் தீட்டி செயல்பட்டதையும் காவலர்கள் கண்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து ரேகாவையும், அவரது காதலனையும் அழைத்து காவலர்கள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த கொடூரன்..! போக்சோவில் அதிரடி கைது..!