சென்னை காசிமேடு பகுதியில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சிதம்பரம் முருகேசன். கடந்த 9 மாதங்களாக அந்த பகுதியில் சிதம்பரம் பணியாற்றி வந்த நிலையில், பல்வேறு குற்றச்செயல்களை அவர் திறம்பட கையாண்டு வந்திருக்கிறார். இதன்காரணமாக காசிமேடு பகுதியில் கொலை,கொள்ளை, கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் பெண்கள் தைரியமாக வெளியில் செல்லும் அளவிற்கு பாதுகாப்பு இருந்திருக்கிறது.

இந்த நிலையில் அண்மையில் சென்னை நகரின் பல பகுதிகளில் காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதில் சிதம்பரம் முருகேசன், அம்பத்தூர் பகுதி காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டிருந்தார். இதனால் நேற்றுடன் காசிமேடு பகுதி காவல்நிலையத்தில் அவருக்கு பணி முடிந்துள்ளது. இதை அறிந்த அந்த பகுதி பெண்கள் 30 க்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டனர். காவல்துறை அதிகாரி சிதம்பரம் முருகேசன் காசிமேடு பகுதியில் இருந்து மாறி செல்லக்கூடாது என்று கூறி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து காவல்துறை ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானம் செய்தார். அவரிடம்  "நீங்கள் வந்த பிறகு தான் இங்கு குற்றச்செயல்கள் குறைந்திருக்கிறது. அதனால் பணியிட மாறுதலை ஏற்காமல் இங்கேயே பணியில் தொடருங்கள்" என்று அந்த பெண்கள் கோரிக்கை விடுத்தனர். சிலர் அவரின் காலில் விழுந்தும் கதறி அழுதனர்.

இது காவல்துறை அதிகாரி சிதம்பரத்தை மட்டுமின்றி அங்கு திரண்டிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. பின்னர் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 104 வயதில் மரணமடைந்த கணவர்..! துக்கம் தாளாமல் உயிர்விட்ட 100 வயது மனைவி..! சாவிலும் இணைபிரியாத தம்பதி..!