தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் ஊராட்சிகள்?
தாம்பரம் மாநகராட்சியுடன் சென்னை புறநகர் பகுதியில் உள்ள சில ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னையில் உள்ள தாம்பரம், ஆவடி பகுதிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெரு நகராட்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த தாம்பரம் மாநகராட்சியாக உருவானது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகள், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
புதிதாக உருவான தாம்பரம் மாநகராட்சி 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வார்டுகள் வரையறை செய்யப்பட்டு 70 வார்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியுடன் சென்னை புறநகர் பகுதியில் உள்ள மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கௌல் பஜார், பெரும்பாக்கம், முடிச்சூர், திரிசூலம், பொழிச்சலூர், வேங்கைவாசல், மதுரப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், அகரம்தென், திருவெஞ்சேரி, நன்மங்கலம், மூவரசம்பட்டு உள்ளிட்ட சில பகுதிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்.13 வரை நீட்டிப்பு!
இந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன. சென்னைக்கும் தாம்பரத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இந்த ஊராட்சிகள் இருக்கின்றன. மாநகராட்சியான தாம்பரத்துக்கும், தலைநகரான சென்னைக்கும் அதிக நிதி ஒதுக்குவதால், இந்த பகுதிகள் கண்டுகொள்ளாமல் விடப்படுவதுடன் போதுமான நிதியும் ஒதுக்கப்படுவதில்லை என தெரிகிறது, இதன் காரணமாக வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என கூறப்படுகிறது.
எனவே, தாம்பரம் மாநகராட்சியுடன் இந்த பகுதிகள் இணைக்கப்படும் பட்சத்தில் மாநகராட்சிக்கு அதிக நிதி வருவாய் கிடைப்பதுடன், இந்த பகுதிகளும் வளர்ச்சியடையும் என்கிறார்கள்.