Asianet News TamilAsianet News Tamil

திருவள்ளூரில் மீன் பிடிப்பதில் இரு தரப்பில் மோதல்; 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் மீண்டும் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மீனவர்களை கைது செய்ய வலியுறுத்தி 3கிராம மீனவர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

two groups of fishermen people clash in pazhaverkadu
Author
First Published Jan 8, 2023, 3:55 PM IST

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக மீண்டும் ஏற்பட்ட மோதலில் 6 மீனவர்கள் காயமடைந்தனர். பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மீனவர்கள் மற்றும் ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம் உள்ளிட்ட 12 கிராம மீனவர்களிடையே பிரச்சினை இருந்து வந்தது. பல கட்ட போராட்டங்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. 

மெட்ரோ ரயிலில் மீன், இறைச்சி கொண்டு செல்ல தடை; பயணிகள் கொந்தளிப்பு

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கடந்த மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதன்படி கூனங்குப்பம் மீனவர்கள் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும். கடலில் பயன்படுத்தும் அரை வலை, நண்டு வலை, டிரம்மல் வலை, 25மிமீ கண்ணி அளவிற்கு குறைவாக உள்ள வலைகளை கொண்டு ஏரியில் மீன்பிடிக்க கூடாது என்று தடை விதித்திருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்கும் போது கூனங்குப்பம் மீனவர்கள் மற்றும் நடுவூர் மாதாக்குப்பம் மீனவர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் இருதரப்பு மீனவர்களும் காயமடைந்தனர். மேலும் இரு தரப்பு மீனவர்களும் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் காவல் துறையினர் இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக கூனங்குப்பம் மற்றும் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. 

மக்களை வருத்தி லாபம் சம்பாதிப்பதா? பெட்ரோல் விலையை ரூ.10 குறைக்க ராமதாஸ் கோரிக்கை

இந்த சம்பவத்தில் ஒருவரை ஒருவர் கட்டைகளால் தாக்கி கொண்டதில் நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் 6 பேர் காயம் அடைந்து பழவேற்காடு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பழவேற்காட்டில் மேலும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் பதற்றத்தை தணிக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் மீனவர்களை கைது செய்ய வலியுறுத்தி பழவேற்காட்டில் 3 கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் இணைந்து மீனவர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios