10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீசார் விரைவாக செயல்பட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thirumavalavan Condemns Tamil Nadu Police: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி மிக கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள். ஒரு வாரத்துக்கு முன்பு அந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவன், சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச்சென்றான்.
10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை
இது குறித்து சிறுமி தகவல் அளித்ததன்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வடமாநில இளைஞன் ஒருவன் சிறுமியை தூக்கிச்செல்வது பதிவாகி இருந்தது. சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை போலீஸ் கைது செய்யாதது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது மகளுக்கு நடந்த கொடூரம் குறித்து சிறுமியின் தாய் கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
கண்ணீரை வரவழைத்த தாயின் பேட்டி
தனது மகளை அந்த கொடூரன் அடித்து ரத்தம் வரவழைத்து கொடூரத்தை அரங்கேற்றியுள்ளான் என்று சிறுமியின் தாய் தெரிவித்து இருந்தார். தனது மகளின் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. ஒரு வாரமாகியும் போலீஸ் குற்றவாளியை பிடிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளியை பிடித்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி இருந்தனர்.
எதிர்க்கட்சிகள் காவல்துறைக்கு கண்டனம்
10 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியை சீரழித்த குற்றவாளியை காவல்துறை பிடிக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பாமவின் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன், ''சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமிக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்'' என்றும் தெரிவித்தார்.
தொல்.திருமாவளவன் கண்டனம்
இந்நிலையில், சிறுமி வன்கொடுமை வழக்கில் போலீசார் விரைந்து செயல்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ''சிறுமி வன்கொடுமை வழக்கில் 10 நாட்களாகியும் இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. கவலை அளிக்கிறது. காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும். இந்த வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு புலானாய்வு குழுவை நியமிக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து விரைந்து விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
