VIDEO : முடிவுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்! திருஷ்டி கழித்து விசைப்படகுகளுடன் கடலுக்கு சென்ற மீனவர்கள்!
61 நாட்கள் மீன்பிடி தடைகாலத்துக்கு பின்னர் நேற்று நள்ளிரவு முதல் சென்னை காசி மேடு மீனவர்கள், விசைப்படகுகளுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 தொடங்கி, ஜூன் 14 முடிவடைந்தது.
இதைத்தொடர்து, காசிமேடு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல தங்களது விசைப்படகுகளில் கடந்த ஒரு வாரமாக ஆயத்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஐஸ் ஏற்றுவது வலைகளை பின்னி சரி செய்வது, டீசல் நிரப்புவது, உதிரி பாகங்களை பழுது பார்த்து சரிசெய்வது, தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் குடிநீர்களை நிரப்புவது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரவு தங்களது சக மீனவர்களுடன் சேர்ந்து விசைப்படகுகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை ஏற்றி பின்னர் மீன்பிடி துறைமுகம் வளாகத்தில் உள்ள அம்மன் கோவிலில் தங்களது குடும்பத்தார் மற்றும் சக மீனவர்களுடன் சேர்ந்து சிறப்பு பூஜைகள் ஆராதனைகளை மேற்கொண்டனர். இறுதியாக, படகுகளுக்கும் பூஜைகள் செய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்
Watch : மது குடித்து மயங்கிய 9 வயது சிறுவன்! ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!
மேலும் மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களூக்கு தமிழக அரசு மூலம் வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரணத்தொகை 6000 ஆயிரம் என அறிவித்து விட்டு 5000 ஆயிரம் தான் வழங்கப்பட்டதாகவும் அதும் சில மீனவர்களூக்கு தற்போது வரை வந்து சேரவில்லை எனவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.