நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என உள் நோக்கமோ, எண்ணமோ ஆளுநருக்கு இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
ஆளுநருக்கு உச்சநீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என உள் நோக்கமோ, எண்ணமோ இல்லையென ஆளுநர் தரப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் - தமிழக அரசு மோதல்
சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையால் பொன்முடி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து பொன்முடிக்கு அமைச்சருக்கான பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி குற்றவாளி தான் என தெரிவித்திருந்தார். எனவே அரசியல் சாசனம் படி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என கூறியிருந்தார்.
ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி கூறுகையில், ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது சட்டவிரோதமானது என எவ்வாறு தமிழ்நாடு ஆளுநர் கூற முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம் என அதிரடியாக தெரிவித்திருந்தது.
இதனிடையே பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஒப்புக்கொண்டு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று பொன்முடி பதவி பிரமாணம் தொடர்பான வழக்கு விசாரணை வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுகையில். ஆளுநர் பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க அழைத்துள்ளார். ஆளுநருக்கு உச்சநீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என உள் நோக்கமோ, எண்ணமோ இல்லையென தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்ய ஆளுநர் அழைப்பு விடுத்ததால் இடையீட்டு மனு முடித்து வைத்தார்.
வழக்கு முடித்து வைப்பு
அப்போது மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் கூறுகையில், உங்களால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருக்கிறது என தலைமை நீதிபதியை புகழ்ந்தார், அதற்கு தலைமை நீதிபதி புன்னகைத்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், மசோதாக்கள் நிலுவை மற்றும் மசோதாக்களுக்கு கு ஒப்புதல் அள்ளிக்க ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயம் செய்யக்கோரிய பிரதான வழக்கை விரைந்து விசாரணை செய்ய கோரிக்கை விடுத்தார். இதற்கு தலைமை நீதிபதி அந்த வழக்கு விரைவில் பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்