RN RAVI vs Ponmudi : உச்சநீதிமன்றம் விதித்த கெடு.. பொன்முடிக்கு பதவி பிரமாணத்திற்கு ஒப்புக்கொண்ட ஆளுநர் ரவி
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்த நிலையில், உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்த நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
பொன்முடிக்கு பதவி பிரமாணத்திற்கு மறுத்த ஆளுநர்
ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து ஆளுநர் ரவி தெரிவித்து வருகிறார். இதனிடையே சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு தண்டனையால் பொன்முடி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டடு உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் எம்எல்ஏ பதவியை பொன்முடி பெற்றார்.
ஆளுநருக்கு எச்சரிக்கைஆளுநருக்கு எச்சரிக்கை
இதனையடுத்து பொன்முடிக்கு அமைச்சருக்கான பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொன்முடி குற்றவாளி தான் என தெரிவித்திருந்தார். எனவே அரசியல் சாசனம் படி பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என தெரிவித்தார். இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழ்க்கு தொடரப்பட்ட நிலையில்,பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் நாளைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்களே எங்கள் முடிவை அறிவிப்போம் என அதிரடியாக தெரிவித்திருந்தது.
அழைப்பு விடுத்த ஆளுநர்
இதனையடுத்து ஆளுநர் ரவி நேற்று சட்டவல்லுநர்களோடு ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கு விசாரணை இன்னும் சிறிது நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு பதவி பிரமாணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவுள்ளார். இதனிடையே ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்