தமிழ்நாட்டின் கீழடி அகழாய்வுக்கு ஆதாரம் கேட்ட மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். வரலாற்றை ஒருபோதும் மறைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
Central Government Seeks Evidence For Tamil Nadu Keezhadi Excavation: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி நாகரீகம் கி.மு. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என நம்பப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு தொடர்பாக தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் ஆய்வறிக்கை சர்ப்பித்தார். ஆனால் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனக்கோரி இந்திய தொல்லியல் துறை இந்த ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியது.
கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்காத மத்திய அரசு
இதற்கு தமிழ்நாட்டில் கண்டங்கள் எழுந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், ''கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அதனை அங்கீகரிக்க முடியும்'' என்று தெரிவித்தார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்
கீழடி ஆய்வு முடிவை அங்கீகரிக்க ஆதாரம் கேட்கும் மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள்.
தமிழர்களின் வரலாற்றை நிராகரிக்கிறார்கள்
இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது. 5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?
வரலாற்றை மறைக்க முடியாது
தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?'' என்றார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் கண்டனம்
இதேபோல் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி எந்த ஆய்வும் நடைபெறவில்லை.
மாட்டு கோமியம் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை
கீழடியின் வரலாறு குறித்து அறிவியல் பூர்வமான நிறுவனங்களால் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டிருக்கிறது. “அதிகமான அறிவியல் பூர்வமான முடிவுகள் தேவை. அப்பொழுது தான் அங்கீகரிக்க முடியும்” என்று அமைச்சர் சொல்கிறார். கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே'' என்று கூறியுள்ளார்.
