தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே கடும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் ஆந்திராவின் ராயலசீமா முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் சித்தார், பெருஞ்சாணி ஆகிய இடங்களில் 6 செ.மீ., பேச்சிப்பாறை, பேரையூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.