சென்னை புளியந்தோப்பில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவரிடம் செல்போன் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவருக்கு சொந்த ஊர் தர்மபுரி. சென்னையில் தங்கி இருந்து மத்திய அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இன்று அதிகாலையில் தன்னுடன் தங்கி படிக்கும் லட்சுமி நாராயணன் மற்றும் கபிலன் என்பவர்களுடன் புளியந்தோப்பில் உள்ள கடைக்கு பிரியாணி சாப்பிட வந்தனர்.
செல்போன் பறிப்பு
அப்போது சென்னை புளியந்தோப்பு ஸ்டீபன் சாலை செங்கை சிவம் பாலம் அருகே வந்த போது பின்னால் பைக்கில் வந்த 2 பேர் தாமஸ் ஆல்வா எடிசனை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து அவர் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரோந்து போலீசார் அதே பகுதியில் கண்காணித்தனர். அப்போது டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை மற்றும் ஸ்டீபன்சன் சாலை சந்திப்பில் உள்ள ஆல்பா பிரியாணி கடை முன்பு செல்போன் பறித்து சென்ற 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பீர் பாட்டிலால் தாக்குதல்
விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹர்ஷித், சல்மான் பாஷா என்பது தெரிந்தது. இதில் சல்மான் பாஷா மீது கொடுங்கையூர், அயனாவரம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட காவல் நிலையங்களில் 7 வழக்குகள் இருக்கிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட போது சல்மான் பாஷா தப்பிச் சென்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது தெரிய வந்தது. இந்நிலையில் அவர்களை மடக்கிப் பிடித்த ரோந்து காவலர் ஐயப்ப லிங்கம் என்பவரை ஹர்ஷத் எட்டி உதைத்து ஆபாசமாக திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. சல்மான் பாஷா பீர் பாட்டிலால் தாக்கிய போது காவலர் தீர்த்தமலை கையில் காயம் ஏற்பட்டது.
ஆபாச பேச்சு
அதனைத் தொடர்ந்து மற்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் காவல் நிலையத்திற்கு சென்றதும் 2 பேரும் ரகளையில் ஈடுபட்டதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஆபாசமாக திட்டி போலீசாரை தாக்க முயன்றனர். காவல் ஆய்வாளரின் அறை கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பிறகு 2 பேரிடம் இருந்து செல்போன்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. காயமடைந்த காவலர்கள் ஐயப்ப லிங்கம், தீர்த்தமலை என்பவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
