சென்னையில் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம். மழைநீரில் மின்சாரம் தாக்கி துப்புரவு பணியாளர் உயிரிழப்பு. பொதுமக்கள் சாலை மறியல்.

தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதும் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக அடையாறு, திருவான்மியூரில் இருந்து பெருங்குடி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் சாலையில் உள்ள மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். கடந்தத 24 மணிநேரத்தில் பாரிமுனை, மடிப்பாக்கம் 16 செ.மீ., கொரட்டூர் 14 செ.மீ., நெற்குன்றம் 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தூய்மை பணியாளர் பலி

இந்நிலையில், கண்ணகி நகரில் இன்று அதிகாலை வழக்கம் போல தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் வரலட்சுமி (30) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மழை நீரில் மின்சார கேபிள் அறுந்து விழுந்து தண்ணீர் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததால் மழைநீரில் கால் வைத்த போது வரலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த வரலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழை நீரில் கால் வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மின்சார வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.