திமுகவில் மக்கள் இணைவதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

DMK R.S. Bharathi's Criticism Of Edappadi Palaniswami: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் திமுகவும், அதிமுகவும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றன. திமுகவை பொறுத்தவரை 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

திமுகவுக்கு எதிராக விஜய், எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அலை அலையாக திரண்டு வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கை, திமுக ஆட்சியில் நிகழும் அவலங்களை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டு விமர்சித்து வருகிறார். மறுபக்கம் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திள்ள தவெக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையம், சட்டம் ஒழுங்கு சீரழிவு உள்ளிட்ட விஷயங்களில் திமுகவை வெளுத்து வாங்கி வருகிறார்.

குடும்பம் குடும்பமாக திமுகவில் இணையம் மக்கள்

இந்நிலையில், ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை தடுக்க முயன்ற எடப்பாடி பழனிசாமியின் செயலை நீதிமன்றம் தடுத்து நிறுத்தி விட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டின் மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை மு.க.ஸ்டாலின் ஜுன் 1 ஆம் தேதி தொடங்கி வைத்தார். அவர் தொடங்கி வைத்த நாள் முதல் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுகவின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் மாண்புமிகு முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணிவகுத்து நிற்கத்தொடங்கினர். மக்கள் குடும்பம் குடும்பமாக கழகத்தில் இணைந்து வருகின்றனர்.

தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்

இதை கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால், நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி. நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுகவிற்கு மாண்பமை நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது.

மக்களிடம் சென்ற பரப்புரை

மேலும் OTP மட்டும் கேட்காமல் வழக்கம் போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது நீதிமன்றம். இப்படி கழக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதட்டமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதிமுக, பாஜகவின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், “சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்” என்ற வகையில் OTP பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கை.! திமுகவின் ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொதுமக்கள் தங்களை கழக உறுப்பினராக இணைத்து வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.