சென்னை ஜாபர்கான்பேட்டையில் பிட்புல் நாய் கடித்து சமையல்காரர் ஒருவர் உயிரிழந்தார். நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாய் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு நாய்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் ஒய்ந்தபாடியில்லை.
பிட்புல் ரக வளர்ப்பு நாய்
இந்நிலையில் சென்னை, ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.எம் கார்டன் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(48). இவர் சமையல் வேலை செய்து வந்தார். வேலையை முடித்து விட்டு வழக்கம் போல் நேற்று மாலை 3 மணியளவில் கருணாகரன் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (48) என்பவர் தனது பிட்புல் ரக வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.
மர்ம உறுப்பை கடித்து குதறியது
இந்நிலையில், திடீரென வீட்டின் முன்பு அமர்ந்திருந்த கருணாகரனை ஆவேசத்துடன் துரத்தி சென்றது மட்டுமல்லமால் அவரது மர்ம உறுப்பு மற்றும் இடது தொடையை கடித்துக் குதறியது. மேலும் அதை தடுக்க முயன்ற உரிமையாளர் பூங்கொடியின் கை மற்றும் கால்களையும் கடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி கூச்சலிட்ட படியே ஒடினர். ஒரு வழியாக எப்படியோ பூங்கொடி நாயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் கருணாகரன் உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
கருணாகரன் உயிரிழப்பு
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடி கொண்டிருந்த கருணாகரன் மற்றும் பூங்கொடியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கருணாகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் மர்ம உறுப்பில் கடித்ததால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் பூங்கொடி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாயின் உரிமையாளர் மீது வழக்கு
மேலும் குமரன்நகர் போலீசார் சமையல்காரரை கடித்துக் கொன்ற பிட்புல் ரக நாயை மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து வலைவீசி பிடித்து நாய்கள் காப்பகத்தில் அடைத்தனர். பின்னர் போலீசார் நாயின் உரிமையாளர் பூங்கொடி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் பிட்புல் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
