நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது.  இந்த நிலையில் புதிய மாவட்டங்களுக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை, மானூர் என எட்டு தாலுகாக்கள் உள்ளன. திருநெல்வேலி, சேரன்மகாதேவி என இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதியதாக உருவாகியிருக்கும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், கடையநல்லூர், செங்கோட்டை, திருவேங்கடம், வி கே புதூர் என 8 தாலுகாக்களும் சங்கரன்கோவில், தென்காசி என இரண்டு வருவாய் கோட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், வண்டலூர், திருக்கழுக்குன்றம் என எட்டு தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த கொடூரன்..! போக்சோவில் அதிரடி கைது..!

வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், கே.வி குப்பம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, காட்பாடி என 6 தாலுகாக்களும் குடியாத்தம், வேலூர் என இரண்டு வருவாய் கோட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாற்றம்பள்ளி என நான்கு தாலுகாக்களும் வாணியம்பாடி, திருப்பத்தூர் என இரண்டு வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிதாக உருவாகியிருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, நெமிலி, வாலஜா, அரக்கோணம் என நான்கு தாலுகாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரக்கோணம், ராணிப்பேட்டை என இரண்டு வருவாய் கோட்டங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படிங்க:  'அவங்க அந்த சாதி.. இந்த கோவிலில் கல்யாணம் பண்ண கூடாது'..! திருமணத்தின் போது சாதிச்சண்டையை கிளப்பிய கிராமத்தினர்..!