வைகோ தான் மிகப்பெரும் துரோகி என்றும் மதிமுக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Nanjil Sampath Calls Vaiko ATraitor: தமிழ்நாட்டு அரசியலில் பாமகவில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், மதிமுகவிலும் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது. தனது வலதுகரமாக விளங்கிய மல்லை சத்யாவை வைகோவே 'துரோகி' என குறிப்பிட்டார். இதற்கு பதிலாக தன்னை விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என மல்லை சத்யா வேதனையுடன் தெரிவித்தார். மல்லை சத்யா மற்றும் துரை வைகோ இடையே கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த உட்கட்சி பூசல் எழுந்துள்ளது.

வைகோ துரோகி என நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு

துரை வைகோவின் ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்ததாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு தான் இந்த மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மதிமுக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், வைகோ தான் கட்சியில் உள்ள அனைவருக்கும் துரோகம் செய்கிறார் என்று பகீரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ ஓரம் கட்டியது ஏன்?

இது தொடர்பாக பேசிய நாஞ்சில் சம்பத், ''நான் கல்லூரி மாணவனாக இருந்தபோதே வைகோவால் ஈர்க்கப்பட்டு மதிமுகவில் இணைந்தேன். சுமார் 19 ஆண்டுகள் அதில் இருந்த நான் பின்பு விலகி விட்டேன். வைகோவுக்கு யாரும் துரோகம் செய்யவில்லை. யாரும் கட்சியை விட்டு வெளியே செல்லவும் இல்லை. அவராகவே தான் கட்சியை விட்டு நான் உள்பட மூத்த தலைவர்களை விரட்டியடித்தார். வைகோவுடன் யாரும் பிரச்சனை செய்தது இல்லை. நான் வைகோவுடன் தொலைபேசியில் பேசும்போது கூட எழுந்து நிற்கும் அளவுக்கு மரியாதை வைத்திருந்தேன். எதையும் அவரிடம் எதிர்பார்த்தது இல்லை. கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். சாலை விபத்தில் காயம் அடைந்து மறுநாளே கையில் கட்டுப்போட்டு மதிமுக முன்னெடுத்த போரட்டத்தில் கலந்து கொண்டவன் நான். எல்லாற்றிலும் நான் முன்னிலையில் இருப்பதாக கருதி வைகோ என்னை ஓரம்கட்டினார்'' என்றார்.

துரை வைகோவால் கவுன்சிலராக முடியுமா?

தொடர்ந்து மதிமுகவின் இப்போதைய நிலைமை குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், ''இப்போது மதிமுக என்ற கட்சியே இல்லை. மதிமுகவில் இருக்கும் 4 எம்.எல்.ஏ.க்களும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தான். துரை வைகோவால் திருச்சியில் ஒரு கவுன்சிலராக நின்று ஜெயிக்க முடியுமா? கே.என்.நேருவால் தான் துரோ வைகோ திருச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இப்படி ஜெயிக்க வைத்த திமுகவையே துரை வைகோ மதிப்பது கிடையாது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகத் தான் மதிமுக உள்ளது'' என்று தெரிவித்தார்.

2 மினி பஸ் அளவுக்கு தான் மதிமுக

மேலும் மல்லை சத்யா, வைகோ மோதல் குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், ''இந்த விவகாரத்துத்து பிறகு மல்லை சத்யாவை நான் தொடர்பு கொள்ளவில்லை. மதிமுக என்ற கட்சி ஒரு அழிவு சக்தி. தொண்டர்கள் எதிர்த்தபோதும் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வந்து பதவி கொடுத்தவர் வைகோ. அடுத்தவர் இருப்பை ஒத்துக்கொள்ளாத சர்வாதிகாரி தான் அண்ணன் வைகோ. 2 மினி பஸ் அளவுக்கு தான் மதிமுக என்ற கட்சியே உள்ளது'' என்று கூறினார்.

வைகோவுடன் நெருக்கம் கிடையாது

மேலும் வைகோவுக்கும், தனக்கும் உள்ள உறவு குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட நாஞ்சில் சம்பத், ''வைகோவுக்கும் எனக்கும் பெரிய நெருக்கம் எல்லாம் கிடையாது. 19 ஆண்டுகளில் அவர் என்னிடம் நான்கு முறை மட்டுமே பேசியுள்ளார். வைகோ திமுக கூட்டணியை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். ம்திமுகவில் இருக்கும் அனைவரும் திமுகவில் ஐக்கியமாக தயாராகி விட்டனர்'' என்றார்.

ஸ்டாலினின் கால்களை தேடும் வைகோ

தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், ''கருணாநிதி முதுகு அறுவை சிகிச்சை செய்தபோது கண்ணப்பன் அவரை நேரில் சென்று பார்த்தார். இதற்கு வைகோ கடும் கோபப்பட்டார். இப்போது வைகோ என்ன செய்கிறார்? ஸ்டாலினின் கால் கிடைக்காதா? என்று தேடிக் கொண்டிருக்கிறார். வைகோவை விட்டு வெளியே வந்தவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள்'' என்று கூறினார்.

வைகோ நெருப்பை விட ஆபத்தானவர்

மேலும், ''மல்லை சத்யாவை வைகோ துரோகி என்று பேசியது மிகவும் தவறு. நெருப்புடன் கூட படுக்கலாம். ஆனால் வைகோவுடன் இருக்க முடியாது. கட்சிக்காக பணம் கொடுத்தவர்கள், பாடுபட்டவர்களை எல்லாம் வைகோ தூக்கி எறிந்து வருகிறார். அரியலூரில் உள்ள ஒரு திருமண விழாவில் தலைமையேற்று நடத்த நான் காரில் சென்றார். விருதுநகரை தாண்டி கார் சென்றபோது விபத்துக்குள்ளானது.

நான் சாகவில்லை என வைகோவுக்கு கவலை

நல்லவேளையாக டிரைவருக்கும், எனக்கும் ஏதும் ஆகவில்லை. டிரைவர் வேறு கார் எடுக்க சென்றபோது நான் சாலையோரம் தனியாக நிற்கிறேன். அப்போது அந்த வழியாக வந்த வைகோ என்னை தனது வாகனத்தில் கூட ஏற்றாமல் அப்படியே தனியே விட்டு விட்டு சென்றார். விபத்தில் நான் சாகவில்லை என்று வைகோவுக்கு கவலை. இதை நினைத்து நான் பல நாட்களாக நான் அழுதேன். ஒரு தலைவனாக இல்லாமல் மனிதனாக இருந்தால் கூட அவர் என்னை வாகனத்தில் ஏற்றியிருப்பார்'' என்று கண்ணீர்மல்க தெரிவித்தார்.