கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி; கணவன், மனைவி கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாட்டில், கப்பலில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த கணவன், மனைவியை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் சலோமி பெபினா மற்றும் அவரது கணவர் அகஸ்டின் ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களிடம் வெளிநாட்டில் கப்பலில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 16க்கும் மேற்பட்டவர்களிடம் கமிஷனாக 40 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளனர்.
அதில் குறிப்பிட்ட சில நபர்களை மட்டும் ஈரான் நாட்டிற்கு குறைவான சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்பியுள்ளனர். மற்றவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Breaking: அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து; தீயணைப்பு வீரர்கள் திணறல்
விசாரணையைத் தொடர்ந்து வெளிநாட்டில் கப்பலில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த கணவன், மனைவியான அகஸ்டின் மற்றும் சலோமி பெபினா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.