Breaking: அரியலூர் பாரத ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து; தீயணைப்பு வீரர்கள் திணறல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலத்தால் சூழப்பட்டது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெரு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் வங்கி மிகவும் பரபரப்பாக செயல்பட்ட நிலையில் மாலை நேரத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு வங்கியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
வங்கியின் காலாளி மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு 8 மணியளவில் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த பயர் அலாரம் திடீரென ஒலிக்கத் தொடங்கியது. அலாரம் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து காவலாளி மீண்டும் வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது வங்கியின் முன் பகுதி வழியாக அதிக அளவில் கரும் புகை வெளியானது. இது தொடர்பாக தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கண்ணாடி கதவுகளை உடைத்து நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வங்கியின் மேற்பரப்பில் குளிர்ச்சிக்காக தர்மகோல் பொருத்தப்பட்டிருந்த நிலையில் அவை முழுவதும் தீயில் எரியத் தொடங்கின. தீ மேலே எரிந்து கீழே விழுவதால் வங்கியின் உள்ளே சென்று தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் செந்துறை, மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் கோர விபத்து; பேருந்து மீது மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
பணி நேரம் முடிவடைந்து ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டதால் உயிர்சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வங்கியின் உதவியாளர் வங்கியினுள் மாட்டிக்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.