தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கடந்த 14ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியது. 14ம் தேதி போகி பண்டிகையும், 15ம் தேதி தை பொங்கலும், 16ம் தேதி மாட்டுபொங்கலும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சென்னை, கோவை போன்ற வெளி நகரங்களில் வசிக்கும் மக்கள் ஊருக்கு மொத்தமாக கிளம்பி சென்றனர். அதற்காக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன. தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களும் நிறைய பேருந்துகளை இயக்கியது.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நிறைவடைந்து விட்ட நிலையில் நேற்று முதல் வேலைக்காக வெளியூரில் தங்கியிருக்கும் மக்கள் அனைவரும் மீண்டும் சென்னை,கோவை போன்ற நகரங்களுக்கு கிளம்பி சென்றனர். இதனால் முக்கிய நகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் 3 கிலோமீட்டரையும் கடந்து வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

வாகனங்கள் காத்திருக்காமல் விரைவாக செல்வதற்கு தற்போது பாஸ்ட் டேக் முறை அமலில் இருந்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பழைய முறையிலேயே கட்டணம் செலுத்தி செல்கின்றனர். இதன்காரணமாகவே சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் தலைநகர் சென்னையில் வேலைக்காக வசிக்கின்றனர். பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் ஒரே நாளில் தலைநகர் திரும்புவதால் சென்னையில் நேற்று மாலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே இருக்கும் ஆத்தூர் சுங்கச்சாவடி, பெருங்குளத்தூர், வண்டலூர் போன்ற பகுதிகளில் விடிய விடிய போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மக்கள் வீடுகளுக்கு சென்றடைய முடியாமல் அவதியில் இருக்கின்றனர்.

Also Read: அதிகாலையில் கோர விபத்து..! கார்-அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்..! 4 பேர் உடல் நசுங்கி பலி..!