சென்னை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக அப்பேருந்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த பாப்பாசத்திரம் அருகே அப்பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஆரணி பயணிகள் பேருந்து எதிர்பாராத விதமாக ஆம்னி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அந்த ஆம்னி பேருந்து மின்சாரத்தில் இயங்கும் பேருந்து என்பதால், விபத்துக்குள்ளான உடன், பேட்டரி சர்க்யூட் பகுதியில் தீப்பிடித்து பேருந்து முழுவது எரிந்து நாசமானது. இதில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். அதேசமயம், மின்சாரப் பேருந்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஆம்னி பேருந்து தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக அப்பேருந்து நிறுவனமான க்ரீன்செல் மொபிலிட்டி விளக்கம் அளித்துள்ளது. அதில், தங்களுடைய பேருந்து ஒன்று சென்னை அருகே விபத்துக்குள்ளானதாக உறுதி படுத்தியுள்ளது. மேலும், பேருந்தின் பின்பகுதியில் மற்றொரு பேருந்து மோதியதால், வாகனம் தீப்பிடித்து எரிந்தது எனவும், ஓட்டுநர் மீது எந்த தவறும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனம், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களால் பயணிகளை சரியான நேரத்தில் இறக்கிவிட முடிந்தது எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் போது இறக்கப்பட்ட பயணிகளுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பேருந்து நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
“எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனே எங்கள் முதன்மையான முன்னுரிமை, மேலும் இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளை திறம்பட நிர்வகிப்பதற்கும், கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கும் ஊழியர்களுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இன்றைய சம்பவம் ஒரு சான்று.” என பேருந்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தீ விபத்துகள் ஏதுமின்றி 5 கோடி கிலோமீட்டர்களுக்கு மேல் பயணித்துள்ளன என்பதையும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்த உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை!
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அந்த பேருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்றும் உறுதியளித்துள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ள க்ரீன்செல் மொபிலிட்டி நிறுவனம், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
