துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.85 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்: ஒப்பந்த ஊழியர் கைது!
துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.85 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 280 கிராம் தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் 30 வயது பணியாளர் இரவு பணியை முடித்துவிட்டு வருகைப் பகுதியில் ஊழியர்கள் வெளியேறும் வாசல் வழியாக செல்ல வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் விமான நிலைய ஒப்பந்த ஊழியரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அவர் அணிந்திருந்த ஷூ மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஷூவை கழற்றச் சொல்லி சோதனையிட முயன்றனர். ஆனால், ஒப்பந்த ஊழியர் ஷூவை கழற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். விமான நிலைய ஒப்பந்த ஊழியரை வெளியில் விடாமல் தடுத்து நிறுத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர்.
அதில், அவர் காலில் அணிந்திருந்த ஷூ ஷாக்சுக்குள் மூன்று சிறிய பார்சல்கள் இருந்தது தெரியவந்தது. அவைகளைப் பிரித்துப் பார்த்த போது ரூ. 85 லட்சம் மதிப்புள்ள் 1 கிலோ 281 கிராம் தங்கப் பசை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் விமான நிலைய ஒப்பந்த ஊழியரையும், தங்கப் பசையையும் சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், துபாயிலிருந்து வந்த விமானத்தில் வந்த கடத்தல் ஆசாமி ஒருவர், தங்கப் பசை பார்சல்களை விமான நிலைய கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, அதனை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொண்டு வந்து கொடுத்தால் ரூ.5 ஆயிரம் கொடுப்பதாக கூறி சென்றதாக தெரிவித்துள்ளார்.
பாசிச பாஜகவை முறியடிக்கும் சக்தி முதல்வர் ஸ்டாலின்: ஆ.ராசா அதிரடி பேச்சு!
கடத்தி வரப்பட்ட தங்கப் பசை பார்சல்களை விமான நிலைய கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு கடத்தல் ஆசாமி விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் தகவல் தெரிவித்து சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் காத்திருப்பதாகவும், தங்கப் பசை பார்சல்களை வெளியில் எடுத்து வந்து கொடுத்தால் ரூ.5 ஆயிரம் கொடுப்பதாக கூறி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, விமான நிலைய ஒப்பந்த ஊழியரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், துபாயிலிருந்து, தங்கத்தை கடத்தி வந்த கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.