Yogi Babu Video: புதிய வேடத்தில் களவானிகள்; வீடியோ வெளியிட்ட யோகி பாபு - போலீஸ் எச்சரிக்கை!
Trai மற்றும் FedEx பெயரில் மோசடி நடைபெற்றதாக அண்மை காலமாக புகார்கள் குவிந்த நிலையில் சென்னை காவல் துறையினர் நடிகர் யோகி பாபு மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள நடிகர் யோகிபாபுவின் வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் காமெடி நடிகர் யோகிபாபு பேசுகிறேன். இந்த பதிவு சென்னை மாநகர காவல் துறைக்கு. கடந்த சில நாட்களாக முதியோர் உட்பட சிலருக்கு பதியப்படாத நம்பரில் இருந்து அழைப்பு வருகிறது. அதில் பேசும் நபர்கள் கொரியர் நிறுவனத்தினர் என அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
மேலும் மும்பையில் இருந்து சீனாவுக்கு சென்ற பார்சலில் 5 கிலோ தங்கம், போதைப் பொருட்கள், புலி தோல், பணம், டாலர், கரன்சி உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த பார்சலுக்கும், உங்களுக்கும் தொடர்பு உள்ளது என சொல்கிறார்களாம். உரையாடலின் போது போனை கட் செய்து விட்டால் உங்களை மும்பை போலீஸ் கைது செய்துவிடுவார்கள். அதனால் நாங்கள் சொல்வதை முழுமையாக கேட்க வேண்டும். உங்களைப் பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்ப வே்ணடும். பின்னர் உங்கள் பணம் முழுவதையும் நீங்கள் எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
பணம் உங்களுடையது தான் என நாங்கள் உறுதி செய்த பின்னர் அதனை உங்களிடமே திருப்பி அனுப்புவோம் என சொல்கிறார்களாம். அத்துடன் வீடியோ காலில் வருவார்கள். உங்களையும் வீடியோ காலில் வரச்சொல்லி பேசுவார்கள். இதுவரை காவல் துறையினர் வீடியோ காலில் வரமாட்டார்கள். இது போன்று உங்களுக்கு போன் கால் வந்தால் 1930 என்ற எண்ணுக்கு போனில் புகார் அளித்துவிட்டு சென்னை மாநகர காவல் துறைக்கு புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். உங்கள் பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
யாரும் ஏமாந்துவிடாதீர்கள். என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது வரை இதுபோன்ற புகார்கள் மூலம் ரூ.10 கோடி வரை மீட்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.