வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்... சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - சென்னையில் பரபரப்பு
சென்னையில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் சென்னை காசிமேடு பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
மிக்ஜாம் புயலின் கோரதாண்டவத்தால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. கடந்த இரு தினங்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த புயல் பாதிப்பில் சிக்கி பல இடங்களில் சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சென்னை காசிமேடு பகுதியில் வசிக்கும் மக்கள் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. காசிமேடு பகுதியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
தங்கள் உடமைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால் தாங்கள் இருக்க இடமின்றி தத்தளித்து வருவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் எனக்கோரி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ரொம்ப கேவலமா இருக்கு மேயர் பிரியா.. எம்எல்ஏ காணோம்.. வரி என்னாச்சு.! கடுப்பான நடிகர் விஷால்..