சமஸ்கிருதத்தை விட தமிழுக்கு குறைவாக நிதி ஒதுக்கிய பாஜகவுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
BJP Allocated Less Funds For Tamil Than Sanskrit: இந்தியாவில் 2014 முதல் 2025 வரை மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது மேற்கண்ட ஆண்டுகளில் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு 2532.59 கோடி ரூபாயும், செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு 147.56 கோடி ரூபாயும் மத்திய அரசு ஒதுக்கியது தெரியவந்துள்ளது.
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு
பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து தமிழை பெருமையாக பேசுகின்றனர். ஆனால் சமஸ்கிருதத்துக்கு மிக அதிகமான நிதி ஒதுக்குகின்றனர் என்று தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ''சமஸ்கிருதத்திற்கு கோடிகள் கிடைக்கும்; தமிழுக்கும் மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் முதலைக் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செல்வபெருந்தகை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு 2014-15 முதல் 2024-25 வரை ரூ.2,533 கோடியும், (ஆண்டுக்கு ரூ.230 கோடி) தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.
மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும்?
இந்தியாவின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதத்தை ஆக்குவோம் என்பதுதான் ஜனசங்கத்தின் கொள்கை. இது அவர்களது 1952 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைகளுக்காக, பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்காக மக்கள் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும்?
சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவு
சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி சமஸ்கிருதம்தான் இந்தியாவின் முக்கியமான மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றேன். செம்மொழி தகுதி பெற்ற அனைத்து மொழிகளுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்'' என்றார்.
தமிழ் பாஜகவுக்கு ஓட்டுக்கு மட்டும் தான்
மேலும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசனும் தமிழுக்கு துரோகம் விளைவிக்கும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ''பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு 2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜக வுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி'' என்று தெரிவித்துள்ளார்.
