களைகட்டிய காசிமேடு: அதிகாலையிலேயே மீன் வாங்க கூடிய கூட்டம்!
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அதிகாலை முதலே மீன் வாங்க கூடிய கூட்டத்தால் களைகட்டியது
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை முதலே மீன் விற்பனை களைகட்டியது. மீனின் விலை சற்று அதிகமான விலைக்கு விற்கப்பட்டாலும், மீன் பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இந்த முறை பெரிய வகை மீன்களான வஞ்சிரம், பாறை, சூரை, ஷிலா, சங்கரா, வவ்வால், திருக்கை உள்ளிட்ட மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. இதனால், மொத்த வியாபாரிகள் மீன்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டினர். எனவே, சிறிய வகை மீன்களே சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று விடுமுறை நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடி துறைமுகத்திற்கு விசை படகுகள் மூலம் ஏராளமான மீனவர்கள் மீன் பிடித்து இன்று அதிகாலையே கரை திரும்பினர். வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், ஆர்கே நகர், திருவொற்றியூர், எண்ணூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன் வாங்க ஏராளமானோர் வந்து தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். அதே போன்று சுற்று வட்டார பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்களில் மீன் விற்பனை செய்யும் பெண்கள், ஏலம் முறையில் மீன்களை வாங்கி சென்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் விவரங்கள் என்ன? முழு விபரம்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், வஞ்சிரம் கிலோ 1300 முதல் 1500 வரை விற்கப்பட்டது. ஷிலா கிலோ 700, பாறை 600, சங்கரா 500, வவ்வால் 700-க்கும் விற்கப்பட்டது. குறைந்த விலையில் விற்கப்படும் சிறிய வகை மீன்களான நெத்திலி, இறால், நண்டு, கடமா, நவரை உள்ளிட்ட மீன்கள் வரத்தும் அதிகமாக காணப்பட்டது இதனால் இன்று மீன் பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.