காவல் துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
CPM Leader Shanmugam Condemned MK Stalin: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்ற அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார். காவலர்கள் அவரை அடித்துக் கொன்று விட்டதாக உறவினர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காவல் துறையின் செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருத்து ஏற்புடையதல்ல
தமிழ்நாடு காவல் துறை தொடர்ந்து அத்துமீறி நடப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், ''இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையதல்ல. விசாரணையின் போது உயிரிழப்பு ஏற்படும் என்று முதல்வர் சொல்வது ஏற்புடையதல்ல.
காவல்துறையினர் சட்டப்படி நடக்க வேண்டும்
முதலமைச்சர் மாரடைப்பினால் என்று சொல்வது ஏற்புடையது கிடையாது. அவர் சொல்வதை வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், காவல்துறை அடித்து கொலை செய்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வெண்டும். காவல்துறை விசாரணையின் போது 24 மரணங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. காவல்துறையினர் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு கொடூரமாக தாக்குதல் செய்வது என்கவுண்ட்டர் செய்வது கூடாது.
யாராக இருந்தாலும் நடவடிக்கை
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி பேசுவார்கள். ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரி பேசுவார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன நினைக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். இளைஞர் மரணத்துக்கு காரணமான காவல்துறை யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை நண்பன் என்று சொல்லும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் ஏற்புடையது கிடையாது.
காவல்துறை அத்துமீறி நடக்கிறது
பல காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நானும் எடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். நான் மழுப்பலாக எந்த பதிலும் சொல்லவில்லை. காவல்துறை அத்துமீறி நடக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி அணியில் யார் இருக்க வேண்டும் யார் இருக்கக் கூடாது என்பதை தலைமை தாங்குவதன் அடிப்படையில் திமுக தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும். அது நாங்கள் முடிவெடுக்க வேண்டியது இல்லை.
கட்சி கொடிகளை அகற்றக்கூடாது
யார் கூட்டணிக்கு வந்தாலும் போனாலும் அதைப்பற்றி முடிவெடுக்க வேண்டியதும் கருத்து சொல்ல வேண்டியதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பணி.சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகளை அகற்றக்கூடாது என்று வழக்கு போட்டுள்ளோம்,
அதிகாரிகளுக்கு கண்டனம்
அதற்கு பொது இடங்களில் உள்ள கொடிகளை அகற்றக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இரண்டு நீதிபதிகளுக்கு பதிலாக அதுக்கும் அதிகமான நீதிபதிகள் இருக்கும் பெஞ்சுக்கு இதை பரிந்துரை செய்கிறோம் என்று சொல்லி இருக்கும் நிலையில் நீதிபதிகள் சொன்னாலும் கொடி மரங்களை அகற்றியே திருவோம் என்று அதிகாரிகள் செயல்படுவதை ஏற்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
