சென்னையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழந்தார். தாயின் கண்முன்னே இந்த விபத்து நிகழ்ந்தது. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இரு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு சாய்ராம் சாலை 3வது தெருவை சேர்ந்தவர் யாமினி(37). இவரது கணவர் உடல் நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணவரை இழந்த யாமினி தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் செளமியா (10) புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

தாயின் கண்முன்னே மகள் பலி

வழக்கம் போல மகளை பள்ளியில் விடுவதற்காக யாமினி மொபட்டில் அழைத்துச்சென்றுள்ளார். பேப்பர் மில்ஸ் சாலை, வால்கிங்சர் சாலை வழியாக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையில் உள்ள ஒரு சிறிய பள்ளத்தில் மொபட் இறங்கி ஏறியதாக கூறப்படுகிறது. இதனால், இருவரும் தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில், யாமினி இடதுபுறமாக மொபட்டுடன் கீழே விழுந்தார். பின்னால் அமர்ந்திருந்த செளவுமியா வலதுபுறமாக சாலையில் விழுந்தார்.

லாரி ஓட்டுநர் கைது

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி தாயின் கண்முன்னே சிறுமியின் தலையின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே சிறுமி துடிதுடித்து உயிரிழந்தார். மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுதார். இதுதொடர்பாக செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக தண்ணீர் லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன்(41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தண்ணீர் லாரி சாலையில் சென்றதைத் தடுக்க தவறிய 2 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சென்னை காவல் ஆணையர் அருண்

இந்நிலையில் சென்னையில் லாரி ஏறி பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதாவது சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகனங்களை குறைந்தது 100 நாட்கள் வரை திருப்பி ஒப்படைக்க கூடாது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் காலை நேரம் மற்றும் பள்ளியில் இருந்து திரும்பும் மாலை நேரங்களில் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. பள்ளி தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரம் பள்ளிகளின் வாயிலில் காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும். காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.